நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவுப்படி நெல்லை சரகத்தில் உள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் அருகில் உள்ள 476 கடைகளில் நேற்று காலை ஒரே நேரத்தில் போதைப்பொருட்கள் சம்பந்தமாக போலீசாரின் சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில் தடை செய்யப்பட்ட புகையிலை சுமார் 31 கிலோ கைப்பற்றப்பட்டு, 4 மாவட்டங்களிலும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
சமுதாயத்தில், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தினை அஸ்தமனம் ஆக்கும் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரக டி.ஐ.ஜி. சரவணன் தெரிவித்தார்.
தொடர்ந்து புகையிலை மற்றும் கஞ்சா பயன்பாட்டினை தடுக்கும் பணியில் போலீசார் முடிக்கிவிடப்பட்டுள்ளனர். முதல் முறை புகையிலை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது அவர்களுக்கு ஓராண்டுவரை நீடிக்கக்கூடிய சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதே போல் 2-வது மற்றும் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பெரிய கேடாக அமையும் புகையிலை பயன்பாட்டினை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களுக்கு புகையிலை பயன்பாடு சம்பந்தமாக தகவல் கிடைக்கும் போது தமிழக அரசின் கட்டணமில்லா செயலியான DRUG FREE TAMILNADU பயன்படுத்தி தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த செயலியில் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பதிவிடப்படாமலேயே தங்களது தகவலை தெரிவிக்க, பகிர்ந்து கொள்ள வசதிகள் உள்ளது எனவும் டி.ஐ.ஜி. சரவணன் தெரிவித்துள்ளார்.








