60 கி.மீ தூரம் CCTV ஆய்வு: உவரி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது!

60-km-CCTV-surveillance-3-robbers-who-snatched-a-chain-from-an-elderly-woman-near-Uvari-arrested

உவரி அருகே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களை, 60 கிலோமீட்டர் தூர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 8-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் உள்ள காரி கோவில் விலக்கு அருகே பெண் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது , இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்தப் பெண்ணைக் கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் உவரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் உத்தரவிட்டார். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதை வரை சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

முறையான மற்றும் திறமையான புலன் விசாரணையின் அடிப்படையில், இந்தச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி முத்து (26), சரவணன் (36) மற்றும் முத்து ரமேஷ் (37) ஆகிய மூவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், இந்த மூன்று பேர் மீது பணகுடி காவல் நிலைய எல்லையில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கு நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பழைய வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, பணகுடி காவல்துறையினர் இவர்களைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, உவரியில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்கின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை மற்றும் பணம் அனைத்தும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைத் திறம்படக் கண்டுபிடித்த வள்ளியூர் உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உட்கோட்ட காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் வெகுவாகப் பாராட்டினார்.

READ MORE ABOUT :