நெல்லையில் அதிரடி: பொங்கல் சோதனையில் மேலபாளையத்தில் சிக்கிய கள்ளத்துப்பாக்கி - இருவர் கைது!

nellai-illicit-firearm-seized-during-pongal-inspection-two-arrested

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் கள்ளத்துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் 600 போலீசார் மாநகர் முழுவதும் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் போலீசார் சோதனையில் இருந்தபோது, மேலப்பாளையம் பகுதியில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் உடனடியாகக் களம் இறங்கிய தனிப்படை போலீசார், மேலப்பாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்தச் சோதனையின்போது, கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆமீர் (25) மற்றும் பாலா ஆகிய இருவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்த கள்ளத்துப்பாக்கி உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தத் துப்பாக்கி வட மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தத் துப்பாக்கியை எதற்காகக் கொண்டு வந்தார்கள்? திருநெல்வேலியில் யாருக்காவது விற்கத் திட்டமிட்டிருந்தார்களா? அல்லது ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட முயன்றார்களா? என்பது குறித்து மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

கைது செய்யப்பட்ட ஆமீர் மற்றும் பாலா ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான நடைமுறைகளை மேலப்பாளையம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், மாநகரின் முக்கியப் பகுதியில் கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கி கடத்தல் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் பிடிக்கப் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

READ MORE ABOUT :