மனையை விற்க மறுத்த ரியல் எஸ்டேட் அதிபரின் காது கிழிப்பு : திமுக நிர்வாகி கைது செய்யப்படுவரா?

attack-on-real-estate-owner-in-tiruvannamalai

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி மீது நடைபெற்ற கொடூரமான கொலைவெறி தாக்குதல் தொடர்பாக திமுகவைச் சார்ந்த தேவதாஸ் மற்றும் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் . ஹென்றி தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

'FAIRA கூட்டமைப்பின் புரவலர் உறுப்பினரும், திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த ஸ்ரீமூகாம்பிகை ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளருமான தண்டபாணி மற்றும் அவரது நண்பர் மனோகர் ஆகியோர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஊராட்சியில் “அன்னபூரணீஸ்வரி நகர்” என்ற பெயரில் மனைப்பிரிவை உருவாக்கி மனைகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இங்கு, சில மனைகளை பி. தண்டபாணி தனது சொந்த பயன்பாட்டிற்காக தண்டபாணி வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், துர்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கமல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர், தண்டபாணியின் சொந்த மனைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் , தண்டபாணி அவர்கள் தனது சொந்த தேவைக்காக வைத்துள்ள மனைகளை விற்பனை செய்ய மறுத்து விட்டார். இதன் காரணமாக கமல் , முத்துக்குமார் , ஜெயா உள்ளிட்ட கும்பல் தண்டபாணி மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் இருந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26ம் ம் தேதி காலையில் தண்டபாணி தனக்கு சொந்தமான அன்னபூரணீஸ்வரி நகர் மனை பிரிவை அவரது மேலாளர் தவமணி மற்றும் நண்பர் செல்வராஜ் ஆகியோருடன் பார்வையிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு காத்திருந்த கமல், முத்துக்குமார், ஜெயா உள்ளிட்ட கும்பல், திமுக நிர்வாகி தேவதாசிடத்தில் போனில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். போனில் தேவதாஸ், தண்டபாணியை கண்டபடி திட்டியுள்ளார். இந்த சமயத்தில், ஜெயா மறைத்து வைத்திருந்த கத்தியால் தண்டபாணியை குத்தியுள்ளார். கத்தி குத்து அவரின் காதில் விழுந்துள்ளது. இதில், காது கிழிந்து தொங்கியது. தண்டபாணியின் முதுகிலும் வெட்டு விழுந்தது. அங்கிருந்த கட்டைகள், இரும்பு ராடுகளை கொண்டும் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த தண்டபாணியை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தண்டபாணியின் அறுந்த காதிற்கு தையல் போட்டும் இடது கை முறிவுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த திமுகவைச் சேர்ந்த தேவதாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தண்டபாணி திருவண்ணாமலை மாவட்ட கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவின் நகல் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூலிப்படையினர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. தண்டபாணியை மிரட்டி வழக்கை திசை திருப்பும் வகையில் போலீசார் செயல்படுவதாக சந்தேகம் உள்ளது. கொலை வெறியுடன் செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த தேவதாஸ் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே அவர் பலமுறை கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் போன்ற வழக்குகளில் சிறைக்கு சென்றுள்ளார்.இரண்டு மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளர். ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்தில் கொடிகட்டி பறந்து கோடிகளில் சம்பாதித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் மக்கள், வியாபாரிகள், தொழில்துறையினர் மற்றும் ரியல் எஸ்டேட் துறை முனைவோர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தி கடந்த 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு காவல்துறை தலைவர் எமது கூட்டமைப்பின் உறுப்பினர் தண்டபாணி கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற துர்க்கை நம்மியன்தலை சேர்ந்த கமல், முத்துக்குமார், கூலிப்படையின் தலைவன் திமுகவைச் சேர்ந்த தேவதாஸ், ஜெயா (எ) ஜெயபிரகாஷ், ரஜினி மற்றும் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் ஆகியோர்கள் மீது கடுமையான சட்ட பிரிவின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். FAIRA கூட்டமைப்பின் உறுப்பினர் தண்டபாணி மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும், உடைமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். '

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :