சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

by எஸ். எம். கணபதி, Feb 15, 2020, 10:19 AM IST

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 1523 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்நாட்டில் 66,492 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் நோய் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து, இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் சீனாவில் உள்ள தங்கள் பிரஜைகளை சிறப்பு விமானங்கள் மூலம் திருப்பி அழைத்தனர். இந்தியாவுக்கு திரும்பி வந்தவர்களுக்கு தீவிரமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின்பே சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். அப்படியிருந்தும், கேரளாவில் 2 பேருக்கு அந்த வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு, தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே, சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் மட்டும் 139 பேர் உயிரிழந்திருந்தனர். அதன்பின், சீனா முழுவதுமே பலி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதே போல் பல ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியதால், அவசர அவசரமாக பெரிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு, நோயாளிகளுக்கு தனிக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார கழகம் நேற்று(பிப்.14) வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 1523 பேர் பலியாகியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 66,492 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உகான் நகரில் 1373 பேருக்கு சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2641 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

You'r reading சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை