கொரோனா வைரஸ் சீனாவில் புதிதாக யாருக்கும் பரவவில்லை..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 11:31 AM IST

உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டிருக்கிறது. 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதே சமயம், சீனாவில் புதிதாக ஒருவருக்கு கூட இந்த வைரஸ் பரவவில்லை.

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. சீனாவில் மட்டும் இது வரை இந்த நோய் தாக்குதலில், சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளனர். 81,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 68,679 பேருக்குச் சிகிச்சையில் குணமளிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று(மார்ச் 18) வரை 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இது வரை 9000 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 31,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. அங்கு 2500க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில்தான் 34 பேருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அந்த வைரஸ் தோன்றிய உகான் நகரிலேயே கூட புதிதாக ஒருவருக்கும் பரவவில்லை என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே, சீனாவில் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைப் பெருமளவு கட்டுப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.


Leave a reply