வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் முதல் சவுதி அரேபிய அரசு தனது அனைத்து எல்லைகளையும் மூடி இருந்தது. இந்நிலையில் தற்போது வான், கடல் மற்றும் சாலை ஆகிய 3 எல்லைகளையும் சவுதி அரேபியா திறந்துள்ளது. வரும் நாட்களில் விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும். தற்போதைக்கு வளைகுடா நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் ஆட்கள் சவுதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
சவுதி செல்பவர்கள் 2 நாட்களுக்குள் எடுத்த பிசிஆர் பரிசோதனை சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ததம்மன், தவக்கல்னா என்ற இரண்டு செயலிகளில் பெயர், விவரங்கள், முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும். தற்போது தொழில், சுற்றுலா மற்றும் மறு நுழைவு விசா உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தியா உள்பட நாடுகளுக்கு சாதாரண விமான போக்குவரத்து ஜனவரியில் தொடங்கும் என்று சவுதி அறிவித்துள்ளது. தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இதை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.