12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழையத் தடை.. அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

Citizens-of-12-countries-banned-from-entering-the-US

வாஷிங்டன், ஜூன்.05; 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தடாலடியாக மேற்கொண்டு வருகிறார்.
பல நாடுகளின் பொருட்களுக்கு தாறுமாறாக இறக்குமதி வரி விதிப்பது உள்ளிட்ட அவரது நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதுபோன்ற சூழலில், "ஆபத்தான வெளிநாட்டவரிடமிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாக்கும்" முயற்சியில், ஆப்கானிஸ்தான், ஹைத்தி, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான தடையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதில் கியூபா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட ஏழு நாடுகள் பகுதி பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவிருக்கின்றன.

முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வரும் விளையாட்டு வீரர்கள், சில ஆப்கானிய நாட்டினர் சில நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட சில விதிவிலக்குகள் உள்ளன.
தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை அமெரிக்கா விரும்பவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தப் பயணத் தடை உத்தரவு, வரும் திங்கள் கிழமை (ஜூன்.09) நடைமுறைக்கு வரும் என டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.

பயணத் தடை உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் சில அமைப்புகள், இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்துள்ளன.