குழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா ?

"ரயிலில் வந்து கொண்டிருந்தேன். ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டே இருந்தது. தாய் என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் அடங்கவில்லை. பக்கத்திலிருந்த தாத்தா, மொபைல் ஃபோனை கொடுத்தார்.
அவ்வளவுதான்! அப்படி ஒரு சிரிப்பு குழந்தையின் முகத்தில்..." 
"கையில மொபைல் ஃபோன் கொடுத்திட்டா என் மகள் சமர்த்தா உட்கார்ந்திருப்பா... சமையலை முடிச்சுடுவேன்,"
- இப்படி ஏகப்பட்ட அனுபவங்களை கேட்க முடிகிறதல்லவா?
கைக்குழந்தை முதல் கல்லூரி செல்லும் பையன் வரை, இன்று ஸ்மார்ட் ஃபோனே உலகம் என்று இருக்கின்றனர்.
 
கேம் விளையாடுதல், வீடியோ பார்த்தல், பாடல்கள் கேட்டல், நண்பர்களுடன் இணைய அரட்டை (சாட்) செய்தல், இணையதளங்களை பார்த்தல் என்று எல்லா வயது குழந்தைகளும் எப்போதும் ஸ்மார்ட் ஃபோனிலும், லேப்டாப்பிலும் உட்கார்ந்திருக்கின்றனர். உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சரியான முறையில் உட்காருகிறோமா, ஃபோன் அல்லது லேப் டாப் திரை எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது, கண்களை விட்டு எவ்வளவு தொலைவில் வைத்து பார்க்கிறோம் என்பது குறித்தெல்லாம் கவனிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வருவது, கண் பார்வையை மட்டுமல்ல, மொத்த உடல் நலத்தையுமே நாளடைவில் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
தொடர்ந்து அலுவலகத்தில் கணினியை பயன்படுத்துவதால் கண்கள் எந்த அளவுக்கு களைப்படைந்து போகின்றன என்பது நமக்கு அனுபவ பாடம். பெரியவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறதென்றால், குழந்தைகளின் கண்கள் எவ்வளவு பாதிக்கப்படும்? சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்ட வேண்டுமாம். ஆனால், தொடர்ந்து இவற்றை பார்க்கும்போது, விளையாடும்போது கண் இமைக்க மறந்து போகிறோம். அது நாளடைவில் கண்களில் பாதிப்பை உருவாக்குகிறது. 
ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகி தொடர்ந்து பயன்படுத்துவதால் பார்வை பாதிப்பு, மனச்சோர்வு, கற்றல் குறைபாடு, எதிர்காலத்தை குறித்த பயம், எதிர்மறை சிந்தனை, வன்முறை மனப்போக்கு ஆகியவை ஏற்படும்.
அமெரிக்காவில் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, 70 சதவீதம் பேர், ஸ்மார்ட் ஃபோன், நவீன ரக தொலைக்காட்சிகள், ஐபாட், லேப்டாப் போன்றவற்றை நன்கு பயன்படுத்த அறிந்திருக்கின்றனர் என்றும், 29 சதவீதம் பேர் ஓரளவுக்காவது பயன்படுத்துகின்றனர் என்றும் கூறுகிறது. இது 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. இத்தனை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை எவ்வளவாய் பெருகியிருக்கும்?
 
அடிமைப்பட்டிருப்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?
நேரங்காலம் இல்லாமல் எப்போதும் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், ஐபாட் போன்றவற்றை பயன்படுத்துதல்
பயன்படுத்துவதை பற்றி கேட்டால், கோபமும் எரிச்சலும் கொண்டு வாக்குவாதம் செய்தல் படிப்பு, விளையாட்டு, விருந்து என்று மற்ற எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாதிருத்தல் அவற்றை பயன்படுத்துவதற்காக பொய் காரணங்கள் கூறுதல் கொடுக்க மறுத்தால் பிடிவாதம் செய்து சண்டை போடுதல் போன்றவை உங்கள் குழந்தையிடம் காணப்பட்டால், உங்கள் மகன் / மகள் ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகி விட்டான்(ள்) என்று புரிந்து கொள்ளுங்கள்.
 
என்ன செய்ய வேண்டும்?
முடிந்த மட்டும் குழந்தைகள் எடுக்காத வண்ணம், அவர்கள் பார்வையில் படாதவண்ணம் ஸ்மார்ட் ஃபோன் போன்ற கருவிகளை வைத்திடுங்கள். 
வண்ணம் தீட்டுதல், புத்தகம் வாசித்தல் போன்ற பயனுள்ள பொழுதுபோக்கினை மேற்கொள்ள ஊக்குவியுங்கள்.
 
பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, திடீரென பிடுங்காமல், முன்னரே எச்சரியுங்கள். 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் என்று போதிய நேரம் கொடுத்து, கண்டிப்பாக அவற்றை வாங்கி விடுங்கள்.
அவர்களை குறை கூறி விட்டு நீங்கள் எப்போதும் ஃபோனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள். வீட்டில் இருக்கும்போது, முக்கியமான அழைப்புகள் தவிர எவற்றையும் ஏற்காதீர்கள். ஓடிப்போய் பேசாதீர்கள். வாட்ஸ் அப், வீடியோ என்று எதையும் அவர்கள் முன் பார்க்காமல் முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.
 
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுப்பது குழந்தைகளுக்கு நன்கு புரியும். மழலையர் மாண்டிசோரி கல்வி முறை அதுதான். ஆகவே, பொறுமையாக குழந்தைகளுக்கு பாடங்களை விளக்குங்கள். பொது அறிவு சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுத்து கேள்வி கேட்டு பதில் கூற உற்சாகப்படுத்துங்கள்.
 
தொந்தரவு தருகிறார்கள் என்று ஸ்மார்ட் ஃபோனை கையில் கொடுக்காதீர்கள். பிள்ளைகளோடு போதிய நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகள் கேட்கிறார்கள் என்று எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்து பழக்காதீர்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் ஏழு வயது மகன் ஐபேட் கேட்டால் வாங்கிக் கொடுக்க வேண்டாம். அது அவனுக்கு தேவையில்லை. அதை புரியும்படி கூறுங்கள்.
 
பிள்ளைகள் வெறுமனே உட்கார்ந்திருக்க விடாதீர்கள். பூங்கா, வெளியே விளையாடும் விளையாட்டுகள் என்று ஏதாவது ஓர் ஆரோக்கியமான பொழுதுபோக்கை பழக்கப்படுத்துங்கள்.
 
ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப் ஆகியவை தீமை மட்டுமே பயப்பதில்லை. அவற்றால் நன்மையும் கிடைக்கிறது. புதியவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன. ஆனால், அதை எந்த வயதில், எவ்வளவு நேரம், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்; பிள்ளைகளல்ல!
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News