முதுமையில் மூளை பாதிப்பு -கண்டுபிடிக்க வருகிறது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்

Artificial intelligence can predict Alzheimer 6 years earlier than medics

by SAM ASIR, Nov 11, 2018, 16:58 PM IST

'டிமென்ஸியா', 'அல்சைமர்' இவை பெரும்பாலும் முதியோர் நலம் குறித்து கூறப்படும் சொற்கள். ஞாபக மறதி, சிந்திக்கும் திறன் பாதிப்பு, நடக்கையில் பாதிப்பு போன்றவை டிமென்ஸியா மற்றும் அல்சைமர் ஆகிய உடல்நலப் பாதிப்புகளுடன் தொடர்புடையவை.

பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அல்சைமர் (alzheimer)பாதிப்புக்கு ஏற்படக்கூடும் என்று நம்பப்பட்டாலும், அதற்குக் குறைவான வயதுடையோருக்கும் பாதிக்கப்படுகின்றனர். மூளையின் செல்கள் அழிவதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்புக்குள்ளானோருக்கு மூளையின் பருமன் குறைந்து போகிறது. அல்சைமர் பாதிப்பு தீவிரமடையும்போது, பாதிப்புக்குள்ளானோர் அன்றாட நடவடிக்கைகளில் கூட ஈடுபட இயலாமல் சிரமப்படுவர்.

இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு டிமென்ஸியா (dementia) பாதிப்பு உள்ளது. பெரும்பாலும் அல்சைமர் என்ற பாதிப்பே டிமென்ஸியாவுக்கு காரணமாகிறது. அல்சைமரால் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக பெருகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் 65 வயதுக்கு குறைவானோர் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அல்சைமர் வியாதியை குணப்படுத்த தற்போது சிகிச்சை இல்லை. ஒருவருக்கு அல்சைமர் பாதிப்பு உள்ளது என்று கண்டறியும்போது, வியாதி குணப்படுத்த இயலாத நிலையை அடைந்து விடுகிறது. அல்சைமர் பாதிப்பை கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு சிகிச்சை அளிப்பது எளிது. ஆனால், இந்தப் பாதிப்பை கண்டுபிடிப்பது சவாலான ஒன்று. வளர்சிதை மாற்றத்தில் தோன்றும் வேறுபாடுகள், மூளையின் குறிப்பிட்ட பகுதி குளூக்கோஸை எடுத்துக்கொள்ளும் முறை ஆகியவை இந்த நோய் பற்றி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இவற்றில் ஏற்படும் மாற்றத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும்.

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ரேடியாலஜி மற்றும் பயோமெடிக்கல் இமேஜிங் துறையை சேர்ந்த ஜே ஹோ சோன், "மூளையின் குளூக்கோஸை கிரகிக்கும் முறையில் ஏற்படும் மாறுதல்கள் வித்தியாசப்படுத்தி அறிய முடியாத அளவு நுட்பமானவை. ஒரு நோய் காரணமாக உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டால் எளிதாக அறியலாம். ஆனால், இந்நோயை வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் வேறுபாட்டின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அது அடையாளங்காண இயலாத ஒன்று," என்று கூறியுள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை கொண்டு பெஞ்சமின் பிராங்க் என்பவர் கதிர்வீச்சு தரவு அறிவியல் முறையில் சில முயற்சிகளை எடுத்தார். மனிதர்கள் சில தரவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்வதுபோல, ஒருவகை செயற்கை நுண்ணறிவை கொண்டு அல்சைமர் நோயின் கூறுகளாக வளர்சிதை மாற்ற வேறுபாடுகளை கண்டறியும் அந்த முயற்சி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET) என்னும் சோதனையில் 18எஃப் ஃப்ளோராடையாக்ஸிகுளூக்கோஸ் (FDG) என்ற சிறப்பு குளூக்கோஸை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கூறை கண்டுபிடிக்க முயல்கின்றனர். ஃப்ளோராடையாக்ஸிகுளூக்கோஸ் இரத்தத்தில் செலுத்தப்படுகிறது. இதன் பின்னர் பிஇடி (FDG-PET) என்ற சோதனை மூளை செல்கள், குளூக்கோஸை கிரகிப்பததை அளந்து வளர்சிதை மாற்றத்தின் அளவை கணிக்கிறது.

இதற்கான பிரத்தியேக படிமுறையை (algorithm) பயன்படுத்துகின்றனர். 1,002 நோயாளிகளிடம் FDG-PET வகையில் எடுக்கப்பட்ட 2,100 மூளை படங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். சிறப்பு படிமுறையை 90 விழுக்காடு படங்களை படிக்கச் செய்தனர். மீதி 10 விழுக்காடு படங்கள் மற்றும் தரவுகளை இந்த படிமுறை எப்படி படிக்கிறது என்று சோதித்தனர். அல்சைமர் நோயுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற வேறுபாடுகளை இந்த சிறப்புப் படிமுறை சரியாக கணித்துள்ளது.

40 நோயாளிகளிடம் பெறப்பட்ட முற்றிலும் புதிய தரவுகளையும் இந்த செயற்கை நுண்ணறிவு படிமுறை சரியாக படித்துள்ளது.

"இந்த ஆராய்ச்சி இன்னும் விரிவாக பல்வேறு நிறுவனங்களின் பார்வையில் செய்யப்படவேண்டும். அதன்பின்னர் நோய்க்கான பரிசோதனையை செய்யும், சிகிச்சையினை அளிக்கும் மருத்துவர்களுக்கு இது உதவியாக அமையும்," என்று சோன் கூறியுள்ளார்.

பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னரே மூளையில் அல்சைமரின் தாக்கம் ஆரம்பித்து விடும் என்று கூறப்படுகிறது. மருத்துவர்கள் கண்டறிவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னரே அல்சைமர் பாதிக்கக்கூடிய வாய்ப்பினை செயற்கை நுண்ணறிவை கொண்டு கண்டறியலாம். அவ்வாறு கண்டுபிடிக்கும்போது, பாதிப்பின் தீவிரத்தை குறைக்க அல்லது எதிர்காலத்தில் முற்றிலுமாக தடுக்க மருத்துவ விஞ்ஞானிகள் முயற்சி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

You'r reading முதுமையில் மூளை பாதிப்பு -கண்டுபிடிக்க வருகிறது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை