பாஜகவுக்கு 2 சீட் கொடுங்க தலைவரே... ஸ்லீப்பர் செல் துரைமுருகனின் ப்ளாஷ்பேக்

How Duraimurugan emerges as BJP Sleeper Cell

Nov 28, 2018, 09:45 AM IST

தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக இருப்பவர் துரைமுருகன்தான்.. அப்பட்டமாக பாஜகவின் ஊதுகுழலாக மாறி கூட்டணியை உடைக்கும் வேலைகளை செய்கிறாரே என குமுறுகின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

துரைமுருகனைப் பொறுத்தவரை இன்றுதான் என்றில்லை.. கருணாநிதி உயிருடன் இருந்த கடந்த லோக்சபா தேர்தலின் போதே பாஜகவுக்காக தொகுதி பங்கீட்டு பேரம் பேசியவர்... ராஜ்நாத்சிங்கின் தூதுவராக கருணாநிதியிடன் சீட் கேட்டு மல்லுக்கட்டியவர் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்காக மாநிலக் கட்சிகளின் தயவை தேசியக் கட்சிகள் நாடுவதும், அதன்மூலம் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் நேரம். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்த சமயம் அது.

புதிதாக தலையெடுத்த நரேந்திர மோடியும் வளர்ச்சி குறித்த அவரது வீச்சுக்களும் மக்கள் மனதில் சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. அது மதவாதக் கட்சி என்ற கோஷத்தை காங்கிரஸ் உள்ளிட்ட முற்போக்குக் கட்சிகள் பேசியதெல்லாம் பொருட்டே இல்லாமல் ஆனது.

மோடி முன்வைத்த கறுப்புப் பணம், ஒவ்வொரு அக்கவுண்ட்டுக்கும் 15 லட்ச ரூபாய், குஜராத் மாடல் எனப் பல அம்சங்கள், காங்கிரஸ் வெற்றிக்கு வேட்டு வைத்தது. இவை எதையும் மோடி நிறைவேற்றினாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால், 2014 தேர்தல் நேரத்திலும் திமுக கூட்டணிக்கு ஆளாய்ப் பறந்தது பாஜ்க. ராஜ்நாத் சிங் மூலமாகப் பேச்சுவார்த்தைகள் தூள் பறந்தன. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் அணியில் இல்லாததால், துரைமுருகன் வேறு கணக்குப் போட்டார்.

நேராக கருணாநிதியிடம் சென்றவர், 'பிஜேபிகாரன்தான் ஆட்சிக்கு வருவான். இரண்டு சீட் கொடுத்தா போதும்னு ராஜ்நாத்சிங் கேட்கிறார். நாமும் அங்கு இருந்தால் நன்றாக இருக்கும். வழக்குகளும்(2ஜி) முடிவுக்கு வந்துவிடும்' எனக் கொஞ்சலாகக் கூற, அருகில் இருந்த ஆ.ராசாவும் பொன்முடியும், ' அவங்களோட எல்லாம் நாம் போக முடியாது. நம்ம கொள்கை என்ன, கோட்பாடு என்ன?' என முகத்தைக் கோபத்துடன் வைத்தவாறு கேட்டுள்ளனர்.

இதை எதிர்பார்த்த துரைமுருகன், என்னய்யா பெரிய கொள்கை. அதே கட்சியோடதானே 99-ல் கூட்டணி வைத்தோம். இப்ப என்ன கொள்கைக்கு வந்துருச்சு' என நக்கலாகக் கேட்டிருக்கிறார். கடைசியாக ராசாவும் பொன்முடியுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் நொந்து போன துரைமுருகன், ' அன்னைக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தா..மத்திய ஆட்சியிலும் இருந்திருக்கலாம்' எனக் கமெண்ட் அடித்தாராம். இப்போது இந்த ப்ளாஷ்பேக்தான் திமுக உடன்பிறப்புகளின் பேசுபொருள்.

- அருள் திலீபன்

You'r reading பாஜகவுக்கு 2 சீட் கொடுங்க தலைவரே... ஸ்லீப்பர் செல் துரைமுருகனின் ப்ளாஷ்பேக் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை