செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை இன்சைட் விண்கலம் பதிவு செய்துள்ளது. வேற்று கிரகம் ஒன்றில் எழும் ஓசையை முதன்முதலாக மனிதர்கள் கேட்க இது வழி செய்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இன்சைட் (‘InSight’ - Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) விண்கலம் நவம்பர் 26ம் தேதியன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. தனது முதல்வார செயல்பாட்டின்போது, 'இன்சைட்' அங்கு காற்று வீசும்போது எழும் ஓசையை பதிவு செய்துள்ளது. இந்த ஓசையை கேட்ட விஞ்ஞானிகள், மணிக்கு 16 முதல் 24 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்போது எழும் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி என்று கூறுகின்றனர். இதன் மூலம் முதன்முறையாக மனுக்குலம், செவ்வாய் கிரகத்தின் ஒலியை காதுகளால் கேட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"இந்த ஒலி, கோடைக்காலம் ஒன்றின் பிற்பகல் பொழுதில் காற்று வீசும்போது வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருப்பதுபோல் உணரச் செய்கிறது. ஒருவேளை, செவ்வாய் கிரகத்தில் இறங்கியுள்ள இன்சைட் லேண்டருக்குள் அமர்ந்திருந்தால் இதே உணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன்," என்று கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டான் பான்ஃபீல்டு, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்சைட் விண்கலத்திலுள்ள காற்று அழுத்தமானி மற்றும் நில அதிர்வுமானி இரண்டின் உதவியோடும் இந்த ஒலி பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருப்பதால், காற்றின் ஒலி குறைந்த அதிர்வெண் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் வாரங்களில், நில அதிர்வுமானி விண்கலத்திலிருந்து செவ்வாயின் நிலப்பரப்புக்கு இறக்கப்பட உள்ளது. அதுவரைக்கும் காற்றின் ஒலியை பதிவு செய்ய இருப்பதாக இன்சைட் விண்கல குழு தெரிவித்துள்ளது.