புலிகள் மீது பழி போடும் சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுப்பெறும் எதிர்ப்பு

Sumandran blame on LTTE - reinforce against Tamil National federations

Jan 12, 2019, 12:28 PM IST

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போரில் இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர் என்று ஐ.நா அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

“இலங்கைப் படைகளுடன் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்றே கூறப்பட்டுள்ளது. யாரும், ஒரு தரப்பின் மீது குற்றம்சாட்டவில்லை. இரண்டு தரப்புகள் மீதும் நியாயமான- விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதனை இலங்கை அரசாங்கத்தினால் நடத்த முடியாது. சர்வதேச விசாரணையின் மூலமே அது சாத்தியமாகும். விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவதால், எமது சமூகத்தில் எனக்கு எதிர்ப்புகள் உள்ளன” என்றும் அவர் கூறியிருந்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு எம்.பி, சுமந்திரன், விடுதலைப் புலிகள் மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் சுமந்திரன் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர், சி.வி.கே. சிவஞானம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும், சுமந்திரனின் இந்தக் கருத்தினால் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது, சுமந்திரன், தான் அப்படிக் கூறியது சரியே என்றும், விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா உள்ளிட்ட 200 புலிகளை அவர்கள் கொலை செய்தது ஜனநாயகமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிறிதரன் ஆகியோர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

தேவையின்றி இப்போது விடுதலைப் புலிகள் விவகாரத்தை இழுக்க வேண்டாம் என்றும், இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது, புலி நீக்க அரசியலை முன்னெடுப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துகள் அதனை இன்னும் வலுப்படுத்துவதாக உள்ளது.

இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களையும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ள நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி., விடுதலைப் புலிகள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளியிட்டு வரும், கருத்துக்கள், கூட்டமைப்பின் எம்.பிக்கள், பிரமுகர்கள் மத்தியில் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You'r reading புலிகள் மீது பழி போடும் சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுப்பெறும் எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை