நாட்டில் உள்ள ஒவ்வொர் ராம்நாத்களுக்காகவும் உழைக்கப் போகிறேன்! - புதிய குடியரசுத் தலைவர்
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வாகியுள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைந்தது. ஜூலை 17ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில், மீரா குமார் போட்டியிட்டனர். இதில் 65 சதவிகித வாக்குகளை பெற்று அதாவது 7 லட்சம் ஓட்டுகள் பெற்று ராம்நாத் வெற்றி பெற்றார். மீராகுமாருக்கு 3.5 லட்ச வாக்குகளே கிடைத்தன. கே. ஆர். நாராயணணுக்கு பிறகு, நாட்டின் இரண்டாவது தலித் குடியரசுத் தலைவர் இவர். குடியரசுத் தலைவராகியுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல் தலைவரும் கூட. உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பாரனுக் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந், பிகார் மாநில கவர்னராக இருந்தார். மிகச்சிறந்த வழக்கறிஞரும் .பாரதிய ஜனதா கட்சியின் தலித் பிரிவுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ''குக்கிராமத்தில் பிறந்த இந்த ராம்நாத் ஜனாதிபதி ஆகியுள்ளேன். இதே போன்று கோடிக்கணக்கான ராம்நாத்கள் விவசாய நிலங்களில் உழுது கொண்டிருப்பார்கள். நான் அவர்களிடம் இதை மட்டும் கூற ஆசைப்படுகிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு ராம்நாத்களுக்காகவும் நான் உழைப்பேன் உழைக்கப் போகிறேன்'' என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,896 வாக்குகள் உள்ளன. 4,120 எம்.எல்.ஏக்கள் 776 எம்.பிக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். 77 எம்.பிக்களின் வாக்கு செல்தாகியுள்ளது. அடுத்ததாக, ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க சார்பில் வெங்கய நாயுடுவும் காங். கூட்டணி சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். வெங்கய நாயுடு வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.