தமிழிசைக்கு, மோடி வாசித்த பாராட்டு பத்திரம்! கோஷ்டிகளைக் கலாய்த்த டெல்லி மேலிடம்
தமிழக பிஜேபி தலைவர் தமிழிசைக்கு மோடி வாசித்த பாராட்டு பத்திரத்தால் ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம் கோஷ்டித் தலைவர்கள். என்னுடைய விசுவாசி தமிழிசை எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி வருகிறார் நரேந்திர மோடி. நேற்று பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர், மயிலாடுதுறையில் பாஜக பூத் கமிட்டியினருடன் அவர் கலந்துரையாடினார். இதில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், 'மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன்' என்றார். தொடர்ந்து பேசியவர், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உடனடியாக விருதுநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கும் வந்துவிட்டார் தமிழிசை. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதைக் காண முடிகிறது என நெகிழ்ந்தார்.
இந்தப் பாராட்டு பத்திரத்தை வானதி, ஹெச்.ராஜா உள்ளிட்டோரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைப் பற்றிப் பேசும் தமிழிசை தரப்பினர், தமிழ்நாடு பிஜேபியில் யாரெல்லாம் அத்வானி ஆதரவாளர்கள் என்பதை மோடியும் அமித் ஷாவும் அறிவார்கள். அதனால்தான் தமிழிசையை யாராலும் அசைக்க முடியவில்லை. அத்வானியின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் பொன்னாரைப் பார்க்கிறார்கள். அதனால்தான் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் மூலமாவும் தலைவர் பதவிக்கு வருவதற்கு சிலர் முயற்சி செய்தார்கள். அவர்களையும் எல்லாம் ஒரு பொருட்டாக அமித் ஷா பார்க்கவில்லை. இதனை விரும்பாத சிலர், ' ஆர்கேநகரில் நோட்டாவுக்குக் கீழ அவர் ஓட்டு வாங்கியிருக்கிறார்' எனச் சொல்ல, ' நீங்கள் வந்தால் மட்டும் நோட்டாவுக்கு மேல ஓட்டு வாங்கிவிடுவீர்களா?' எனக் கமெண்ட் அடித்தாராம் மேலிடத் தலைவர் ஒருவர்.
நேற்று மோடி கொடுத்த பாராட்டும் தமிழிசைக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் கத்தி, மான்கொம்பு, கேடயம், ட்ரம்ஸ் ஆகியவைகளை வைத்து இன்று தாமரைப் பொங்கலைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார் தமிழிசை.