அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்!
தைப்பொங்கல் திருநாளில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தனிக் கவனம் செலுத்தியதால் பிரச்னை சுமுகமாக தீர்ந்தது.
நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்கு உற்சாகமாக தொடங்கியது. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க இளம் காளையர்களும் மல்லுக்கட்டினர். மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில் 690 காளைகளும் மாடுபிடி வீரர்கள் 500 பேருக்கும் மேல் பங்கேற்றுள்ளனர்.
அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை பாலமேட்டிலும் நாளை மறுதினம் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடக்க உள்ளது.