விஜயசாந்தியை அடுத்து அப்சரா! சசிகலாவிடம் நடக்கும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள்
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கையான அப்சரா ரெட்டியை நியமித்திருக்கிறார் ராகுல்காந்தி. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சென்னையைச் சேர்ந்த அப்சரா, பத்திரிகையாளராகவும் சமூக செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வருபவர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், அவரை முதன்முதலாக போயஸ் கார்டனில் வைத்துப் பேட்டி எடுத்து வெளியிட்டார். ஆனால், இது பேட்டியல்ல, அன்றைய காலகட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பலரும் கார்டன் வந்தனர். அப்படி வந்தவர்தான் அப்சரா. ஓரிரு நிமிடங்கள் பேசியதை வைத்துப் பேட்டியாக வெளியிட்டுவிட்டார்' என தினகரன் தரப்பினர் பேசினர். இருப்பினும் சசிகலாவிடம் தனிப்பட்ட முறையிலும் நட்புடன் இருக்கிறார் அப்சரா.
இந்தநிலையில் அப்சரா நியமனம் குறித்துப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சமீபத்தில் விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் எதுவும் வெளியில் வரவில்லை. இப்போது சசிகலாவுக்கு வேண்டிய அப்சராவுக்கு உயர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், காங்கிரஸ் கூட்டணிக்குள் சசிகலாவைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். வடமாவட்டங்களில் திமுகவுக்கு 50 சதவீத வாக்கு பலம் உள்ளது. தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் திமுக, காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. இதனை ஈடுகட்டுவதற்கு தினகரன் தேவை என நினைக்கிறார் ராகுல்.
இதனை அறிந்துதான், கூட்டணிக்குள் அமமுக வந்தால் வரவேற்போம் என திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராசா கூறியிருந்தார். இந்த முயற்சியை தினகரன் விரும்பவில்லை. திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அரசியல் வாழ்வு அம்போவாகிவிடும் எனக் கருதுகிறார். ஆனால், மோடி எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என ராகுல் கவலைப்படுகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடப்பதால் சிறையில் தெம்பாக இருக்கிறார் சசிகலா. காங்கிரஸுடன் கூட்டணி சேருவதே லாபம் என அவர் கருதுகிறார். இதையறிந்து விஜயசாந்தியை பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைத்தார் ராகுல்காந்தி. அடுத்ததாக, அப்சராவுக்கும் பதவி கொடுத்திருக்கிறார்' என்கிறார்கள்.