நீதிபதியிடம் திணறிய தமிழக போலீஸ்.. சயன், மனோஜை சிறைக்கு அனுப்ப மறுப்பு!

தமிழக போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுதலை செய்தார்.

போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க போலீசார் திணறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொள்ளை மற்றும் தொடர் கொலை சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தனர். இதனால் அதிமுக தொழில் நுட்ப பிரிவு சார்பில் முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பரப்புவதாக 3 பேர் மீதும் புகார் தரப்பட்டது.

சென்னை குற்றப்பிரிவு போலீசார் எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் டெல்லி விரைந்து மனோஜ், சயன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மாத்யூ சாமுவேல் போலீசில் சிக்கவில்லை. கைதான சயன், மனோஜ் இருவரையும் விமானத்தில் சென்னை அழைத்து வந்த போலீசார், நேற்று பகல் முழுவதும் விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். இருவரையும் கைது செய்ததற்கான போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி சரிதா உத்தரவிட, போலீசார் அவகாசம் கேட்டனர்.

பின்னர் 5 மணி நேரம் கழித்து நீதிபதியின் வீட்டிற்கு சென்று ஆஜர் படுத்தினர். அப்போதும் போலீசார் சமர்ப்பித்த ஆதாரங்களில் திருப்திப்படாத நீதிபதி சரிதா இருவரையும் போலீஸ் காவலில் அனுப்பவோ, சிறையில் அடைக்கவோ மறுத்து விட்டார். சயன், மனோஜ் இருவரையும் விடுதலை செய்த நீதிபதி, வரும் 18-ந் தேதி தங்கள் தரப்பு வழக்கறிஞர்கர்ளுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதாக அவசர, அவசரமாக வழக்குப் போட்டு கைது செய்த போலீசார் போதிய ஆதாரங்கள் இன்றி நீதிபதி முன் தவித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More News >>