ஐயப்பனை தரிசித்த கேரள பெண் கனகதுர்கா மீது உறவினர்கள் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி!
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய கேரளப் பெண் கனகதுர்காவை அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சரமாரி மாக தாக்கியதில் காயமடைந்தார்.
சபரிமலை ஐயப்பனை அனைத்து வயதுப் பெண்களும் தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்புகள் சபரிமலை செல்ல முயன்ற பெண்களைத் தடுத்து போராட்டம் நடத்தியதால் சபரிமலை வளாகமே கலவரப் பூமியானது.
இத்தனை பரபரப்புக்கு இடையில் கடந்த 2-ம் தேதி அதிகாலையில் கேரளாவைச் சேர்ந்த 40 வயதான பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் ஐயப்பனை தரிசித்தனர். இருவரும் தரிசனம் செய்த தகவல் தாமதமாக வெளியில் வர கேரளா முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்து அமைப்புகள் நடத்திய பந்த் போராட்டத்தால் வன்முறை வெடித்தது. பிந்து, கனகதுர்கா ஆகியோருக்கு குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்தனர்.
கனக துர்காவை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அவருடைய சகோதரர் கூறியிருந்தார். இந்இலையில் சபரிமலை தரிசனத்திற்குப் பின் முதன் முறையாக நேற்று மாலை கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் குடும்பத்தாரும், உறவினர்களும் அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.