ஜெ. கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் தான் இறந்தார் - சேலம் டி.ஐ.ஜி.விளக்கம்!

ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மரணத்தில் சந்தேகம் எதுவுமில்லை, விபத்தில் தான் இறந்தார் என சேலம் டி.ஐ.ஜி.செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் அளித்த பரபரப்பு பேட்டியில், கோடநாடு கொள்ளை மற்றும் தொடர் கொலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை. கார் ஏற்றிக் கொல்லப்பட்டார் என்றும் மாத்யூ கூறியிருந்தார்.

இந்நிலையில் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி.செந்தில்குமார் அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். கனகராஜ் விபத்தில் தான் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் தவறான பாதையில் சென்று கார் மீது மோதி யதில் இறந்தார். அப்போது மது அருந்தியிருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கனகராஜ் விபத்தில் மரணமடைந்தது வழக்கு விசாரணை முறையாகவே நடந்தது.

கனகராஜ் விபத்தில் மரணமடைந்த சம்பவத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விபத்து நடந்த மறுநாள் அவருடைய சகோதரர் தனபால் தெரிவித்து பேட்டியும் கொடுத்திருந்தார். இப்போது சந்தேகம் உள்ளது என முன்னுக்குப் பின் முரணாக புகார் செய்துள்ளார் என டி.ஐ.ஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

More News >>