தொடுதிரை அடிமைகள்: உருவாகும் புதிய சமுதாயம்
மும்பை விமானநிலையத்தை 'லொகேஷன்' என்னும் இருக்குமிடமாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தான் அந்த 17 வயது இளைஞன். கூடவே தான் லண்டனுக்கு பயணித்துக் கொண்டிருப்பதாகவும் பதிவு செய்திருந்தான்.
அதுவரைக்கும் வயசுப் பையன் ஏதோ போனை நோண்டிக் கொண்டிருக்கிறான் என்று பொறுத்துக் கொண்டிருந்த பெற்றோர், தங்கள் மகனுக்கு ஏதோ ஆகி விட்டது என்று கண்டுபிடித்து அந்த இளைஞனை எங்களிடம் அழைத்து வந்தார்கள் என்று பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார் பூனாவில் இயங்கும் மது மற்றும் போதை மருந்து அடிமைகள் மறுவாழ்வு அமைப்பொன்றை சார்ந்த டாக்டர் அஜய் டுடானே.
16 முதல் 27 வயது வரை உள்ள இளைஞர்கள், வாலிபர்களில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை இறுதியாக பார்த்த நேரம் அதிகாலை 2:30, 3 அல்லது 3:30 மணி என்று தெரிய வருகிறது. காலையில் வகுப்புச் செல்ல வேண்டிய இளைஞர்கள் இவ்வளவு நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுவது அவர்கள் படிப்பை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று டுடானே தெரிவித்துள்ளார்.
மது மற்றும் போதை மருந்து ஆகியவற்றை உபயோகிக்கும் வழக்கத்திற்கு அடிமையாக இருப்போரை அப்பழக்கங்களிலிருந்து விடுவிக்க நாங்கள் முயற்சியெடுத்து வருகிறோம். இப்போது கல்லூரிகளிலிருந்து ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறித்து பேசுவதற்கு எங்களுக்கு அழைப்பு வருகிறது என்று கூறும் அவர், 27 வயதான பெயிண்டர் ஒருவர் 30 வாட்ஸ்அப் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். நெடுநாள் தான் தொடுதிரை அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அவரால் உணர இயலவில்லை. இப்போது அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். தம்முடைய போனிலிருந்து பல சமூக ஊடகங்களின் செயலிகளை அழித்து விட்டார். இப்போது மூன்று வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே இருக்கிறார். புத்தகம் வாசிப்பது, தியானம் செய்வது என்று கவனம் செலுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
போதை மருந்துகள், மது ஆகியவற்றைப் போன்றில்லாமல் தொடுதிரை அடிமைத்தனத்திற்குள்ளானோர் சிகிச்சைக்குப் பின்பும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளோருக்கு மனநலம் மற்றும் நடத்தை ரீதியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மனநல மருத்துவர் ஆமோத் போர்கர் கூறுகிறார். ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதோடு அவற்றுக்கோ அவை போன்ற சாதனங்களுக்கோ அடிமையாகாமல் இருப்பது இன்றைய தலைமுறைக்கு முன்புள்ள முக்கியமான சவாலாகும்.