இந்திய அணி படுதோல்வி - 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்க்ரம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், புஜாரா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால், இந்திய அணி 28 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
பிறகு முரளி விஜய் 46 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா 10 ரன்னிலும் பார்த்திவ் படேல் 19 ரன்களிலும் வெளியேற 164 ரன்களுக்கு முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால், மறுபுறம் கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று போராடினார். அற்புதமாக ஆடிய விராட் கோலி, 246 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 21ஆவது டெஸ்ட் சதமாகும்.
மேலும், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் இந்திய கேப்டனால் அடிக்கப்பட்ட இரண்டாவது சதமாகும். முன்னதாக, 1996-97ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்கள் குவித்திருந்தார்.
150 ரன்களை கடந்த விராட் கோலி, இறுதியாக அணியின் எண்ணிக்கை 307ஆக இருந்தபோது 153 ரன்களில் வெளியேறினார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பின்னர் 28 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், அந்த அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், ஹசிம் ஆம்லா இருவரும் தலா 1 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர்.
டி வில்லியர்ஸ் 80 ரன்களிலும், டீன் எல்கர் 61 ரன்களிலும் வெளியேறினர். பின்னர், குவிண்டன் டி காக் [12], பிலாந்தர் [26], மஹாராஜ் [6], ரபாடா [4] என அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் நிதானமாக விக்கெட்டை விழாமல் ஆடிய கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 49 ரன்களில் 9ஆவது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் மொஹமது சமி 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்புரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் முரளி விஜய் 9 ரன்களிலும், அடுத்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 4 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையிலும் வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 26 ரன்களுக்குள் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 35 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 19 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் இந்திய வீரர்கள் வருவதும், போவதுமாகவே இருந்தனர்.
பார்த்திவ் படேல் [19], ஹர்த்திக் பாண்ட்யா [6], அஸ்வின் [3] என அடுத்தடுத்து நடையை கட்டினர். மறுபுறம் பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா [48] எடுத்து வெளியேறினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மொஹமது ஷமி அதிரடியாக விளையாடினார்.
அவர், 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் குவித்தார். பின்னர் பும்ரா 2 ரன்களில் வெளியேற இந்திய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அறிமுக வீரர் நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.