கர்நாடகாவில் குழப்பமோ குழப்பம் - 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவல்!
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் வாபஸ் பெற்று பா.ஜ.க. பக்கம் தாவியதால் அம்மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க. தீவிரமாகி விட்டது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை பா.ஜ.க வளைத்து மும்பையில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குமாரசாமி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் ஆகியோர் கவர்னருக்கு இன்று கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் இருவரும் எடுத்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், துணை முதல்வர் பரமேஸ்வரா, அமைச்சர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தங்களது தொடர்பில் இருப்பதாக துணை முதல்வர் பரமேஸ்வரா கூறியதால், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி அருகிலுள்ள குருக் ராமில் எடியூரப்பா பத்திரமாக தங்க வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதாக வெளியாகும் தகவல்களால் கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பமும், பரபரப்பும் நிலவுகிறது.