காங்கிரஸில் இணையும் மைத்ரேயன்! டெல்லியில் நடக்கும் விறுவிறு பேச்சுவார்த்தைகள்!
ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வளர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று எம்பி ஆனவர் மைத்ரேயன். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோடு மோதல் தொடர்வதால், காங்கிரஸில் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம்.
போயஸ் கார்டனில் சசிகலாவோடு மோதிய ஓ.பன்னீர்செல்வம், மெரினா உள்ள ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு முதன்முதலில் ஆதரவு கொடுத்தவர் மைத்ரேயன்.
அதிமுகவின் டெல்லி முகமாகவே அவர் முன்னிறுத்தப்பட்டார். தொடர்ந்து மாநிலங்களவையில் கோலோச்சி வருகிறார். ஆனால், அவரது சொந்த சமூகத்தையும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்த்து வந்தார் சசிகலா.
அம்மா இல்லாத நிலையில் தனக்கு சசிகலா முக்கியத்துவம் தர மாட்டார் என நம்பியதால், ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கரம் கொடுத்தார். இதன் பின்னணியில் பாஜக தலைவர்களும் இருந்தனர்.
தினகரன்-பன்னீர்செல்வம் ரகசிய சந்திப்புக்குப் பிறகு தர்மயுத்த கோஷ்டிகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கோபத்தில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மைத்ரேயன், 'ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது.
மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையே புகைச்சல் இருப்பது வெட்டவெளிச்சமானது. இதன்பிறகு அடுத்து என்ன செய்வது என தன்னுடைய ஆதரவாளர்களிடம் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்துப் பேசுவார் என எதிர்பார்த்தார். அவரது எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது.
இதேநிலை நீடித்தால் அடுத்த முறை தனக்கு எம்பி பதவி தர மாட்டார்கள் என நினைத்த மைத்ரேயன், காங்கிரஸ் மேலிடப் புள்ளிகளிடம் பேசி வருகிறார்.
'ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து வந்ததால் பிஜேபியில்தான் சேருவார் எனப் பலரும் நினைக்கின்றனர். அடுத்தமுறை பிஜேபி அரசு வருவது சந்தேகம் என்பதால் காங்கிரஸில் துண்டு போட்டு வைத்திருக்கிறார். விரைவில் இணைப்பு வைபவம் நடக்கும்' என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.