பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சால் சஸ்பெண்ட் ...... வீட்டிலேயே முடங்கிய கிரிக்கெட் வீரர் பாண்ட்யா!
பெண்களைப் பற்றி மோசமாக விமர்சித்து சஸ்பெண்ட் ஆன இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக அவருடைய தந்தை கூறியுள்ளார்.
டி.வி.ஷோ ஒன்றில் பெண்களைப் பற்றி கிண்டல், கேலி, ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தது.
இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்த இருவரும் உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். வீடு திரும்பியது முதலே ஹர்த்திக் பாண்ட்யா சோகத்தில் இருப்பதாக அவருடைய தந்தை ஹிமான்சு தெரிவித்துள்ளார்.
வீடு வந்தது முதல் வெளியில் தலை காட்டவில்லை. தான் செய்த தவறுக்கு மிகவும் வருத்தத்தில் உள்ளார். மகர சங்கராந்தி கொண்டாட்டத்திலும் ஈடுபாடு காட்டவில்லை. பட்டம் விடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. நடந்த சம்பவம் பற்றி குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பேச்செடுப்பதில்லை. இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது, மீண்டும் செய்யவும் மாட்டான் என்று நம்புகிறோம் என்று பாண்ட்யாவின் தந்தை சோகமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராகுல், பாண்ட்யா ஆகியோர் செய்த தவறுகளுக்கு எதிர்காலததை பாதிக்கும் அளவுக்கு தண்டனை இருக்காது. தவறுகளை திருத்துவதாக தண்டனை அமையும் என இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.