இதுதான் சிம்பு..! வீடியோ பார்த்து மார்தட்டிக் கொள்ளும் மகத்
சிம்பு பேசிய பொங்கல் வாழ்த்து வீடியோவை பார்த்து, சிம்பு உண்மையான, நேர்மையான மனிதர் என்பதால் தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார் பிக்பாஸ் புகழ் மகத்.
மங்காத்தா, ஜில்லா படத்தில் நடித்த மகத், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மகத் ஹீரோவாக நடிக்கும் படம் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா. இதில், சிம்புவின் தீவிர ரசிகனாக கொண்ட கதை களத்தில் நடித்துள்ளார்.
மகத் சிம்புவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, தீவிர ரசிகரும் கூட. இந்நிலையில், சிம்பு தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளுடன் கூடிய வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார்.
அந்த வீடியோவில், வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை பிளாக்கிலோ, கூடுதல் கட்டணம் கொடுத்தோ பார்க்க வேண்டாம். கவுண்டரில் உரிய கட்டணத்தில் பார்த்தாலே போதும்.
கட் அவுட், பேனர், பாலாபிஷேகம் என்று வீண் செலவு செய்ய வேண்டாம். அதற்கு பதில், அம்மா, அப்பாவிற்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மகத், தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவை புகழ்ந்துள்ளார்.
அதில், இதனால் தான் நாங்கள் சிம்புவிற்கு இவ்வளவு பெரிய ரசிகர்களாக இருக்கிறோம். உண்மையான, நேர்மையான, பாசமான மனிதர் சிம்பு. வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் ரீலீஸை முன்னிட்டு எனது குடும்பத்திற்கு பரிசுகள் வாங்க இருக்கிறேன்.. அப்போ நீங்க ? என்ற கேள்வியுடன் சிம்புவை புகழ்ந்துள்ளார் மகத்.