எஸ்எம்எஸ், அழைப்பு விவரங்களை கேட்கும் செயலிகளுக்கு ஆப்பு
குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், அழைப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்குமான அனுமதிகளை கேட்கும் செயலிகளை தங்கள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்க உள்ளது. அதற்குரிய அனுமதி அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்காத செயலிகள்மேல் இந்த நடவடிக்கை பாய்கிறது.
கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எத்தனையோ செயலிகள் பயனர்களுக்குக் கிடைக்கின்றன. குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மற்றும் தொலைபேசி அழைப்புகளை செய்வதற்குக்கூட செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை செயலிகள், பயனர்கள் அழைப்பு விவரங்களை பார்ப்பது, குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவை உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை வழங்கப்படுவதன் மூலம்தான் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுள்ளன.
இதுபோன்ற செயலிகளை கொண்ட நிறுவனங்கள் அதற்கான அனுமதி அறிவிப்பு படிவத்தை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. தங்கள் பிளேஸ்டோர் மூலம் விவரங்களை சேகரித்து அத்தகைய நிறுவனங்களுக்கு 90 நாள்களுக்குள் படிவத்தை தாக்கல் செய்யும்படி மின்னஞ்சல் மூலம் தகவலையும் கூகுள் அனுப்பியுள்ளது.
செயலிகள் தங்களின் முக்கியமான தகவல்களை பார்ப்பதற்கு என்ன அவசியம் என்பதை பயனர்கள் அறிய தரவேண்டும் என்பதான புதிய கொள்கைளை கூகுள் நிறுவனம் வகுத்துள்ளது.தங்களது நிறுவனத்தின் செயலிகள் உள்ளிட்ட அனைத்து செயலிகளுக்கும் இப்புதிய கொள்கை முடிவு பொருந்தும் என்று கூகுள் கூறியுள்ளது.
சமர்ப்பிக்கப்படும் படிவங்களை உலக அளவில் கூகுள் குழுவினர் பரிசீலித்து அந்த செயலிகளுக்கு பயனர்களின் எந்தெந்த விவரங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது; எந்த நிறுவனங்கள் தேவையில்லாமல் அவ்விவரங்களை தெரிந்துகொள்ள அனுமதி வாங்குகின்றன என்று ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பர் என்று கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, கணக்கின் உண்மைத்தன்மையை குறுஞ்செய்தி மூலமாக பரிசோதிக்கும் செயலி நிறுவனங்கள், குறுஞ்செய்திக்குப் பதிலாக பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) உபயோகிக்கலாம் போன்ற மாற்று வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பல்லாயிரக்கணக்கான செயலி உருவாக்கு நிறுவனங்கள் தங்கள் செயலிகளை, பயனர் விவரங்களை கேட்காத வண்ணம் கூகுளின் புதிய கொள்கைக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து அளித்துள்ளன அல்லது உரிய அனுமதி அறிவிப்பு படிவத்தை சமர்ப்பித்துள்ளன.
எந்த தகவலையும் அளிக்காத நிறுவனங்களின் செயலிகளை தங்கள் பிளேஸ்டோரிலிருந்து கூகுள் அகற்ற உள்ளது. அனுமதிகளை கேட்கும் வண்ணமே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட செயலி நிறுவனங்கள், தங்கள் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு 2019 மார்ச் 9ம் தேதி வரை கூகுள் கால நீட்டிப்பு செய்துள்ளது.