மோடி ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலா? மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா விளக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் புகார் குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது பாஜக முன்வைத்த ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு பெரும் புயலை வீசியது. 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையையும் உருவாக்கியது.

பின்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என டெல்லி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் முறைகேடுகள் நடைபெற்று அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அல்ல. நுண்ணலை ஸ்பெக்ட்ரம்தான் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதனை ஏலத்தில் விடுவது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என விளக்கம் அளித்துள்ளார்.

More News >>