கர்நாடகாவில் பாஜகவின் ஆபரேசன் தாமரை 2.Oவுக்கு காங். ஆப்பு? அடக்கி வாசிக்க டெல்லி அட்வைஸ்!

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் எடியூரப்பாவின் ஆபரேசன் தாமரை 2.O கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை கைவிடுமாறு பா.ஜ.க.மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம்.

கடந்தாண்டு மே மாதம் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 -ல் பா.ஜ.க வும், 79-ல் காங்கிரசும், 37 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வென்றன. தேர்தல் முடிவு வந்தவுடனே ம.ஜ.தவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்து கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரியது.

பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை அழைத்தார் ஆளுநர். குதிரை பேரம் நடத்தி காங் மற்றும் ம.ஜ.த எம். எல்.ஏ க்களை இழுத்து விடலாம் என்ற நினைப்பில் எடியூரப்பாவும் முதல்வரானார்.

2008-ல் நடந்தது போல் இந்த முறை நடக்காமல் தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பாதுகாத்தது. இதனால் நம்பிக்கை வாக்கு கோராமலே பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

பின்னர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. ஆனாலும் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க கங்கணம் கட்டி வந்த எடியூரப்பா 'ஆபரேசன் தாமரை 2.0’ என்ற பெயரில் கவிழ்ப்பு திட்டத்தை கையில் எடுத்தார்.

இதனால் கடந்த ஒரு வாரமாக கர்நாடக அரசியலில் ஒரே குழப்பம் தான். அமைச்சர் பதவி இழந்த காங்.எம்.எல்.ஏ ரமேஷ் ஜர்கோலி மூலம் ஆபரேசனை ஆரம்பித்தார் எடியூரப்பா.

நாகேந்திரா, மகேஷ் குமட்டாலி, கணேஷ், பீமா நாயக், அமரே கவுடா என 7 காங்.எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகினர். கோவாவிலும், மும்பையிலும் பா.ஜ.க வினரால் ரகசியமாக அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜ.க. பக்கம் சாய்ந்தனர். மொத்தம் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க திட்டம் தீட்டிய தகவல் கசிய உஷாராகிவிட்டது காங். தரப்பு.

சித்தராமையா, சிவக்குமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கி காங்.எம்.எல் ஏ க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டதாக தகவல். நாளை காங்.எம்எல்.ஏ.க்கள் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கட்சித் தாவல் நடவடிக்கை என எச்சரிக்கை விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாயமான 4 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களுரு திரும்பி விட்டனர். இதற்கிடையே ஆட்சிக்கு ஆபத்து வராது என்று ஆரம்பம் முதலே தெம்பாக கூறி வந்த முதல்வர் குமாரசாமியோ, பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களில் சிலர் தம்முடன் தொடர்பில் உள்ளதாக கொளுத்திப் போட பா.ஜ.க தரப்பு உஷாரானது.

தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை டெல்லி அருகே குர்கானில் சொகுசு விடுதியில் பாதுகாத்தது பாஜக. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க.வும், ஆளும் கூட்டணியும் மாறி மாறி புகார் செய்ததால் கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆக மொத்தம் எடியூரப்பாவின் ஆபரேசன் தாமரை 2.0 திட்டம் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது என தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. எனவே ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தால் வரும் மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடும் என டெல்லி மேலிடம் கருதுகிறது. இதனால் ஆபரேசன் தாமரை முயற்சியை தொடர வேண்டாம் என எடியூப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

 

More News >>