அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் பங்கேற்பு- முதியவர் மரணம்- களத்தில் இருந்து நேரடி தகவல்கள்!

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப் புகழ் ஜல்லிக்கட்டில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள்:

டோக்கன் வழங்காமலே உள்ளூர் காளைகளை முதலில் அனுமதிப்பதாக வெளியூர் காளைகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியதால் போட்டி தொடங்கும் முன்னரே சலசலப்பு ஏற்பட்டது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வி.ஐ.பி மேடை ஆட்டம் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்கை கையில் பிடித்தபடியே அடிக்கடி கூட்டத்தை ஒழுங்குபடுத்தியனார் அமைச்சர் உதயக்குமார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. மத்திய அரசின் கண்காணிப்பு குழுவுக்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறச் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டின் போது மிரட்டல் விடுத்ததால் கால்நடை மருத்துவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிறந்த ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல்வர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் உதயக்குமார் அறிவித்தார். தமது சார்பில் சைக்கிள், டிராவல் பேக் என மானாவாரியாக பரிசுகளை அள்ளி வழங்கினார் அமைச்சர் உதயக்குமார். அலங்காநல்லூரைச் சேர்ந்த சடையாண்டி என்ற முதியவர் ஜல்லிக்கட்டு பார்த்து கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
More News >>