கூவத்தூர் பாணியில் குர்கான் சொகுசு விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் கும்மாளம்!
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் சொகுசு விடுதியில் கூவத்தூர் பாணியில் உற்சாகத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்துவதிலும் எடியூரப்பா கவனமானார்.
104 எம்.எல்.ஏ.க்களில் முக்கிய தலைகள் தவிர 95 பேரை டெல்லிக்கு அழைத்துச் சென்றார் எடியூரப்பா . டெல்லியில் பா.ஜ.க தேசியக்குழு கூட்டம் முடிந்த கையோடு குர்கானில் உள்ள அதி நவீன சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எப்படியும் குமாரசாமியை கவிழ்த்து விடுவோம். அடுத்து நம்ம ஆட்சிதான் என்று நப்பாசை காட்டி எம் எல் ஏக்களை குஷிப்படுத்துகிறாராம் எடியூரப்பா. கிரிக்கெட் விளையாட்டு, மசாஜ் என சில எம்.எல்.ஏ.க்களும், பாரில் குடித்து படு உற்சாகமாக காணப்படும் புகைப்படங்களும் வெளியாகி நம்ம ஊர் கூவத்தூர் கும்மாளத்தை மீண்டும் நினைவுபடுத்திவிட்டது.