கணவன் நாக்பூரில்- மனைவியோ அமெரிக்காவில்...வாட்சப் மூலம் நடந்த விவாகரத்து!

நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வாட்சப் மூலம் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக்சிகன் நகரத்தில் இந்தியத் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு பெற்றோர் நிச்சயித்து இருவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் முடிந்தது.

இன்ஜினியரிங் முடித்துள்ள இருவரும் மிக்சிகனில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இடையில் விசா பிரச்னையால் மனைவி நாக்பூரில் தமது பெற்றோருடன் தங்கினார்.

அப்போது தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் மேல் படிப்புக்காக மிக்சிகனுக்கு படிப்பு விசாவில் சென்றார் மனைவி.

தம்பதியினர் இருவருக்கும் இடையே பிரச்னை முற்றி மிக்சிகனில் தனித்தனியே வசித்து வந்தனர். விவாகரத்து செய்வதெனவும் முடிவு செய்தனர்.

சொந்த ஊரான நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தார் கணவர். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு அமெரிக்காவில் இருந்து கணவர் நாக்பூர் வந்தார்.

தனது கல்வி நிறுவனம் விடுமுறை வழங்காததால் மனைவியால் இந்தியா வர முடியவில்லை. இதனால் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்ய நீதிபதி அனுமதித்தார்.

தனது சகோதரரை அனுப்பி அவர் மூலம் சமரசப் பேச்சுக்கு சம்மதித்தார் மனைவி. தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வாட்சப் வீடியோ கால் மூலம் மனைவி தெரிவித்தார்.

தொகை கூடுதல் என கணவர் மறுக்க பேச்சு இழுபறியானது. கடைசியில் 10 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் செட்டில் செய்வதாக கணவர் சம்மதித்தார். சமரசம் குறித்து நீதிபதியிடம் இருதரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

இறுதியில் அமெரிக்காவில் உள்ள மனைவியிடம் வீடியோ கால் மூலம் நீதிபதி உறுதி செய்து இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். வாட்சப் மூலம் நடந்த இந்த ருசிகர விவாகரத்து டெக்னாலஜி எந்தளவுக்கு முன்னேறி விட்டது என்பதற்கு உதாரணமாகி விட்டது.

More News >>