ஆதரவற்றோர்களுக்கு அரசு வேலை: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மாநில அரசு பணிகளுக்கான வேலை வாய்ப்பில் ஆதரவற்றோர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆதரவற்றோர்களின் நலன் கருதி வேலை வாய்ப்பு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கூட்டம் நேற்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முன்டே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாததால் கடும் அவதிக்குள்ளாகிவரும் ஆதரவற்றோர்கள் எந்த பிரிவின்கீழ் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால், எந்த சிறப்புபிரிவிலும் சேர முடியாமல் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் அவர்களுக்கு தேவையான சலுகைகளும் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவில் அரசுப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் ஆதரவற்றோர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுஇந்த வாய்ப்பின் மூலம் அவர்கள் அரசு வேலைகளை பெறுவதுடன் இதர வசதிகளையும் பெறுவார்கள்” என்றார்.