சபரிமலை சென்றதால் உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பு கோரிய கேரள பெண்கள் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் முதன்முதலாக சபரிமலை ஐயப்பனை கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது.
பிந்து, கனகதுர்கா ஆகியோரின் குடும்பத்தினரும் இருவரின் செயலை ஏற்கவில்லை. வீட்டில் சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற கனகதுர்காவை குடும்பத்தினர் சரமாரி தாக்குதல் நடத்தியதில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து தங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இருவரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனுவை தாக்கல் செய்துள்ளார். சபரிமலை சென்று வந்தது முதலே தொடர்ந்து மிரட்டல் வருகிறது. சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.