நான் சி.எம். கேண்டிடேட்.. எப்படி ஸ்டாலின் பக்கத்துல நிற்பேன்... வலை வீசிய காங். தலைகளுக்கு தினகரன் நோஸ்கட்

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டால், தினகரனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை காங்கிரஸில் உள்ள சசிகலா ஆதரவு தலைவர்கள் பேசி வருகிறார்களாம். தினகரனுக்கு 5 சீட் கொடுத்தாலும் நல்லது எனவும் தூது முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

கரூர் மாவட்டத்தில் அமமுகவின் ஐகானாக இருந்த செந்தில்பாலாஜி, திமுக ஜோதியில் கரைந்துவிட்டார். அந்த தினத்தில் இருந்தே ஸ்டாலினோடு கடுமையாக மோதிக் கொண்டு வருகிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்.

கடந்த சில நாட்களாக மோசமான வார்த்தைகளில் இரண்டு தரப்பும் அர்ச்சனை செய்து கொண்டது. முரசொலி நாளிதழில், தினகரனை 20...120...420 என விமர்சித்துக் கட்டுரை எழுதப்பட்டது. இதனால் அதிர்ச்சியான தினகரன், திருட்டு ரயில் ஏறிவந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். தங்கையை சிறைக்கும் தாயை விசாரணைக்கும் அனுப்பிய உத்தமர் என மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்தச் சண்டைகள் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சிலர் விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி, சசிகலாவுக்கு மிகவும் வேண்டியவர்.

திருநாவுக்கரசரும் பழைய பாசத்தில் சசிகலா தரப்பினரோடு நெருங்கிய நட்பில் இருக்கிறார். இந்த நிலையில் தினகரன் இன்று கொடுத்த பேட்டி, காங்கிரஸ் பொறுப்பாளர்களை யோசிக்க வைத்துவிட்டது. அவர் கொடுத்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சில மாநிலக் கட்சிகளிடம் பேசி வருகிறோம். தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்க மாட்டோம். கூட்டணி அமையவில்லை என்றால், அமமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்தை காங்கிரஸ் பொறுப்பாளர்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசியவர்கள், ' திமுக நம்பக்கம் இருப்பதை தினகரன் விரும்பவில்லை. ஆரம்பத்திலேயே நம்மை அவர் பக்கம் வருமாறு அழைத்தார். இந்த அழைப்பை தலைமை நிராகரித்துவிட்டது.

தென்மாவட்டத்தில் மட்டுமே சசிகலாவுக்கு செல்வாக்கு உள்ளது. கடைசி நேரத்தில் வந்தாலும்கூட தினகரனுக்கு 5 சீட்டுகளை ஒதுக்கலாம் என திமுகவே நினைக்கிறது. ஆனால், நான் ஒரு சி.எம் கேண்டிடேட் அந்தஸ்தில் இருப்பவன். ஸ்டாலின் பக்கம் நான் எப்படிச் செல்ல முடியும் எனப் பேசி வருகிறார் தினகரன்.

சசிகலா மனது வைத்தால் காங்கிரஸ் அணிக்குள் தினகரன் வருவார். மோடி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் இந்தக் கூட்டணிக்கு வந்து சேரும். அதன் தொடர்ச்சியாகத்தான் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள்.

- அருள் திலீபன்

More News >>