தருமபுரியில் மட்டும் ஜெயிச்சாவே போதும் .. ஸ்டாலினுக்காக அன்புமணி வெயிட்டிங்

திமுக தலைமையிலான கூட்டணியில் எப்படியும் இடம் கிடைக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக் கொண்டிருக்கிறாரான். எப்படியாவது தருமபுரியில் வென்றுவிட்டால் போதும் என ஒருவித பதற்றத்துடன் கூட்டணி முயற்சிகளை செய்து வருகிறாராம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் வலுவான அணி ஒன்று உருவாகிவிட்டது. இதில் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கவுரவம் பாதிக்காத அளவுக்கு இடங்களை ஒதுக்கலாம் என்ற முடிவில் திமுக இருக்கிறது. அதே சூழலில் எந்தக் கூட்டணியில் சேருவது என்ற குழப்பத்தில் பாமகவும் தேமுதிகவும் இருக்கிறது.

'திமுக, தினகரன், எடப்பாடி பழனிசாமி என ஒரேநேரத்தில் மூன்று கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்திய ஒரே கட்சியாக பாமக இருக்கிறது' என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கூட்டணி பற்றிப் பேட்டியளித்த ராசாவும், பாமக, தேமுதிகவை அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு. இந்த கட்சிகளை அழைத்து சுயமரியாதையை சுட்டுக்கொல்ல நாங்கள் விரும்பவில்லை. பாஜக, அதிமுகவை வீழ்த்த திமுக ஒன்றே போதும். கூட்டணிக்கு வரும் கட்சிகள் வெற்றி வாய்ப்பு இருக்குமானால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால் இதை ஏற்பதும், ஏற்காததும் அவர்களது விருப்பம். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.

அண்ணா,கருணாநிதி ஆகியோர் வழியில் கூட்டணி அமைக்க ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் திமுகவே வெற்றி பெறும்' என்றார்.

பாமகவை விமர்சனம் செய்ததற்குப் பதிலடியாக ராமதாஸ் எந்தக் கருத்தையும் பேசவில்லை.

ஆனால், பிரேமலதா கொடுத்த எதிர் பதிலை திமுகவினர் எதிர்பார்க்கவில்லை. ராமதாஸ் சைலண்டாக இருப்பதற்கு ஒரே காரணம் அன்புமணி. 'நீங்கள் எதையாவது பேசப் போய் கூட்டணி அமையாமல் போய்விடக் கூடாது. போனமுறை மோடி அலை கை கொடுத்தது. இந்தமுறை பெரிய கட்சியோடு சேர்ந்தால்தான் நான் மீண்டும் எம்பி ஆக முடியும். கூட்டணி பேச்சு முடியும் வரையில் அமைதியாக இருங்கள்' எனக் கூறிவிட்டாராம்.

அதனால்தான் யாரையும் விமர்சிக்காமல் இருக்கிறாராம். தற்போது அதிமுகவினரோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்றால், எதிர்காலத்துக்கு நல்லது என நினைக்கிறார் அன்புமணி.

திமுகவின் பிடிவாதத்தை தளர்த்த நினைத்தும் அவரால் முடியவில்லை. இருப்பினும், தன்னுடைய சகாக்களிடம், ஸ்டாலின் எப்படியும் நம்மைக் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்வார் என நம்பிக்கையோடு பேசி வருகிறாராம்.

-அருள் திலீபன்

More News >>