எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை - மருத்துவர்கள் மகிழ்ச்சி!
சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் உறவினர் பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வாலிபர் ரத்த தானம் வழங்கினார்.
ஆனால், அந்த ரத்தத்தை அப்பெண்ணுக்கு ஏற்றவில்லை. இந்த ரத்தம் வங்கியில் இருந்து கைமாறி சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இதற்கிடையே, வெளிநாடு செல்ல முயன்ற அந்த வாலிபருக்கு உடல் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் அந்த வாலிபருக்கு எச்ஐவி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் சிவகாசி ரத்த வங்கிக்கு உடனே சென்று தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், அதற்குள் கர்ப்பிணிக்கு எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்டது. இதனால், கர்ப்பிணிக்கு எச்ஐவி கிருமி ரத்தத்தில் கலந்து எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கர்ப்பிணிக்கு வரும் 30ம் தேதி குழந்தை பிறப்பதற்கான தேதி கணிக்கப்பட்டிருந்தது. இதனால், எச்ஐவி பாதித்த பெண்ணின் மூலம் பிறக்கும் குழந்தைக்கும் எச்ஐவி பாதிக்காமல் இருக்க மருத்துவக் குழு அப்பெண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு சற்று நேரம் முன்பு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதுவும், சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.