ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? - மெல்போர்னில் நாளை கடைசிப் போட்டி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால், இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? என்பது போல் அமைந்துள்ளது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.