வடமாவட்ட கட்சி மூத்த தலைவர்- ஆளும் கட்சி பிதாமகன் இடையே சேலத்தில் சந்திப்பு நடைபெற்றதா? அல்லது விரும்பாத கட்சிகள் கிளப்பிவிடும் வதந்தியா?

சேலத்தில் அண்மையில் ஆளும் கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவரை வடதமிழ்நாட்டு மூத்த தலைவர் ஒருவர் சந்தித்து கூட்டணிக்கு ‘இணக்கம்’ தெரிவித்துவிட்டார் என்கிற தகவல் ரெக்கை கட்டி பறக்கிறது. ஆனால் தொடர்புடைய வடதமிழகத்து தரப்போ, இது அப்பட்டமான திட்டமிடப்பட்ட வதந்தி; இப்படி ஒரு சந்திப்பும் இணக்கமும் வருவதை துளிகூட விரும்பாத கட்சிகள் கிளப்பிவிடும் வதந்தி என்கின்றன.

இருதரப்பில் இருந்தும் நமக்கு கிடைத்த தகவல்கள் இவை:

சேலத்துக்கு அண்மையில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் சென்றிருந்தார். அப்போது ரகசியமாக வடதமிழகத்து மூத்த தலைவர் ஒருவர் சந்தித்து பேசினாராம்.

இச்சந்திப்பில் வழக்கமாக அறிக்கைகளில் குறிப்பிடும் விமர்சனங்களை தவிர்த்து, முதல்வர்... முதல்வர் என்றும் நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறீர்கள் எனவும் நெகிழ்ந்து பேசினாராம் வடதமிழக தலைவர்.

ஆளும் தரப்பு தலைவரும், இதேபோல் தொடர்ந்து இணக்கம் காட்டினால் அடுத்த கட்டம் குறித்து நாம் பேசுவதில் தயக்கம் இல்லை என உறுதியளித்தார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்போ, அப்படி ஒரு சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் இரு சமூகங்கள் இணைந்துவிட்டால் தங்களது ஆட்சி அதிகார கனவு அம்பேல் என கருதும் கட்சிகள்தான் இத்தகைய தகவலை வதந்தியாக பரப்புகின்றனர் என்கின்றனர்.

எந்த தரப்பு சொல்வது உண்மை என்பது ‘சந்தைக்கு’ வரும்போது தெரியும்தானே!

 

More News >>