கர்நாடகா காங்.எம் எல் ஏக்கள் கூட்டம் - மாயமான 7 பேரும் ஆஜர்!
கர்நாடக காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை வளைத்து குமாரசாமி அரசை கவிழ்க்கும் முயற்சியை பா.ஜ.க. மேற்கொண்டது. ஆபரேசன் தாமரை 2.0 என்ற பெயரில் பா.ஜ.க நடத்திய குதிரை பேரத்தில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென மாயமானதால் கர்நாடக அரசியல் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது.
பா.ஜ.க.வின் அதிரடி முயற்சியை அறிந்து சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியாளர்களை ஒரு வழியாக சமாளித்து விட்டனர். தொடர்ந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை நிரூபிக்க இன்று எம்எல்ஏக்கள் கூட்டமும் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை பாயும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் தொடர்பு எல்லைக்கு வெளியே மாயமாகி இருந்த காங்கிரஸ் அதிருப்த எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக பெங்களூருவில் தலை காட்டத் தொடங்கினர்.
பெல்லாரி பகுதி எம்எல்ஏக்கள் நாகேந்திரா, கணேஷ், ஆனந்த் சிங், பீமா நாயக் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்துவிட்டனர். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அதிருப்தியில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் போக்கு காட்டி வந்த ரமேஷ் ஜர்கோலியும், அவரது தீவிர ஆதரவு எம்எல்ஏவான மகேஷ் குமட்டா ஹள்ளியும் சமாதானம் அடைந்து கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பா.ஜ.க.வின்ஆபரேசன் தாமரை திட்டத்தை காங்கிரஸ் அதிரடி வியூகம் வகுத்து தகர்த்ததால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சியில் உள்ளார்.அத்துடன் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவும் டெல்லி பா.ஜ.க மேலிடம் தடை விதித்து விட்டது. இதனால் டெல்லி அருகே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றே பெங்களுரு திரும்பிவிட்டனர்.