அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதி- 6 லோக்சபா தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்- உற்சாகத்தில் ராமதாஸ்!

அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார் ராமதாஸ். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ராமதாஸ்.

அதற்குப் பதில் கொடுத்த எடப்பாடி, தேர்தல் முடிந்த பிறகு ராஜ்யசபா காலி இடங்களை அறிவிக்கும்போது, கண்டிப்பாக ஒதுக்குகிறோம். ஒருவேளை தருமபுரி தொகுதியில் தோற்றாலும் ராஜ்யசபா எம்பி சீட் அன்புமணிக்காகக் காத்திருக்கும்' என நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

இதில் ஆறு இடங்கள் வரையில் கேட்டிருக்கிறார்கள். தொகுதி செலவுகளுக்கும் எடப்பாடி சிக்னல் கொடுத்துவிட்டார்.

இதே அணிக்குள் தேமுதிகவைக் கொண்டு வரும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை என்பதை உணர்ந்த பிரேமலதா தரப்பு, தேர்தலுக்குச் செலவு செய்யக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அதையும் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பதை பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம். தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டாம். பொறுமையாக இருப்போம்' எனக் கூறியிருக்கிறார்.

அதிமுக தலைமையிலான அணியில் பாமக வருவதை வடக்கில் உள்ள மாவட்ட செயலாளர்கள் சிலர் ரசிக்கவில்லை. இதைப் பற்றிப் பேசியவர்கள், ' அம்மா இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறோம். பாமக வந்தாலும் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கக்கூடிய தொகுதிகளை மட்டும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

வடக்கில் நமக்கு நல்ல வாக்கு சதவீதம் இருக்கிறது. இந்தநிலையில் 6 சீட்டை ஏன் பாமகவுக்குத் தாரை வார்க்க வேண்டும். வடக்கில் அம்மா உருவாக்கி வைத்திருக்கிற எஸ்சி ஓட்டுக்கள் அனைத்தும் திமுக பக்கம் போய்விடும். இதனால் நமக்கு நஷ்டம்தான் ஏற்படும்' எனப் புலம்பியுள்ளனர்.

பாமக வந்துவிட்டால், நம்முடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் எனவும் வன்னிய மாவட்ட செயலாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

இதற்குப் பதில் கொடுத்த அதிமுக தலைமை பொறுப்பாளர்கள், " தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் திமுக பலவீனமாக இருக்கிறது. நம்மைப் பற்றி நல்லவிதமாக மக்களிடம் பேசுவதற்கு ராமதாஸ் போன்றவர்கள் தேவை.

5.5 சதவீத வாக்கு உள்ள ஒரு கட்சி நம்மோடு இருப்பது கூடுதல் பலம்தான். இந்த வாக்குகள் எல்லாம் ஸ்டாலினுக்கு எதிராக அன்புமணி வாங்கியவை. ஸ்டாலினை விட அன்புமணி வல்லவர் என சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ததால் கிடைத்த வாக்குகள்.

அன்றைய காலகட்டத்தில், ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க ஸ்டாலின் தயாரா என சவால்விட்டார் அன்புமணி. இதனால் வன்னிய வாக்குகள் அவர்களுக்கு வந்து சேர்ந்தது.

தேர்தலின்போது இது நமக்குப் பயனளிக்கும். சமூகங்களுக்கு அப்பாற்பட்ட தலைவராக மக்கள் நம்மைப் பார்ப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும் குறுகிய சாதி வட்டத்துக்குள் நம்மை அடைத்துவிடுவார்கள். ஜெயலலிதாவைப் போல ஒரு பொதுவான தலைவராக நம்மைப் பார்க்க மாட்டார்கள். இதன் காரணமாக தலித் வாக்குகளையும் நம்பக்கம் திருப்ப முடியாது. நம்மால் முடிந்த அளவுக்குப் பெரும்பான்மையாக இருப்பவர்களையும் சிறுபான்மையின சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். அதற்கேற்பத்தான் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

More News >>