தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் கைது ஏன்? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தவா?

தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினியை நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்தாண்டு தீவிர போராட்டம் நடந்தது. வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பல பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்வதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தூத்துக்குடிக்கு படையெடுத்தனர். ரஜினியும் சென்றார்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் ராஜ் என்ற இளைஞரிடம் தன்னை தெரிகிறதா? என்று ரஜினி கேட்டதற்கு நீங்கள் யார்? என்று திரும்பக் கேட்டார். இதனால் அதிர்ச்சியில் ரஜினியின் முகமே வெளிறிப்போனது.

உடனடியாக சென்னைக்கும் திரும்பி விட்டார். உலகமறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினியையே நீங்கள் யார்? என்று தெரியாதது போல் சந்தோஷ் ராஜ் கேட்டது பெரும் பரபரப்பானது.

இந்நிலையில் தான் சந்தோஷ்ராஜை தூத்துக்குடி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் கல்லூரி மாணவர்களிடம் கடந்த டிசம்பர் 19-ந் தேதி துண்டுப்பிரசுரம் வழங்கியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட அவருடைய வழக்கறிஞர் அரிராகவனும் கைது செய்யப்பட்டார். சந்தோஷ்ராஜ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி பண்டாரம்பட்டு கிராம மக்களும் போராட்டம் நடத்தினர்.

ரஜினியை யார் என்று கேட்டதற்காக ரஜினியை திருப்திப்படுத்தவே போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதனால் ரஜினி விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

More News >>