முதலில் அமமுகவுடன் பாமக பேச்சு... அடுத்தது ஸ்டாலினுக்காக வெயிட்டிங்.....இப்போ அதிமுகவுடன் உடன்பாடு!
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டி என்பது பாமகவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. ஆனால் அப்போதே தேர்தல் நேரத்தில் இது நிச்சயம் மாறும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் புதுவையில் தினகரனை நேரில் சந்தித்து அன்புமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமூக ரீதியிலான வாக்கு வங்கி கணக்கைப் போட்டு இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது தினகரன் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணி அமையலாம் என்கிற சூழலும் இருந்தது. தேமுதிகவும் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து நாங்கள் யாருடனும் பேசவில்லை என விளக்கம் தந்தார் அன்புமணி. அதேநேரத்தில் கூட்டணியா? யாருடன் கூட்டணி? தனித்துப் போட்டியா? என்பதில் ராமதாஸும் அன்புமணியும் முரண்பட்ட நிலை எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் தினகரன் தனித்துவிடப்படுகிற நிலை என களம் மாறியது. அதேபோல் அமமுகவும் அதிமுகவும் இணையலாம் என்கிற பேச்சும் எழுந்தது. இதில் பாஜகவும் இடம்பெறுகிறது என்கிற சூழ்நிலை உருவானது. இதை அன்புமணி விரும்பவில்லை. திமுக- காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம்பெற்றால் எப்படியும் தருமபுரியில் வென்று மத்திய அமைச்சராகலாம் என்பது அவரது கணக்கு. இதனால்தான் ஸ்டாலின் அழைப்பார் என காத்திருந்தார்
ராமதாஸோ அதிமுக-பாஜக கூட்டணியில் இருப்போம்; காங்கிரஸ் அரசுதான் என்று உறுதியாக சொல்ல முடியாது; ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு உத்தரவாதம் என்பதுடன் அதிமுக கூட்டணிக்கு போவோம் என முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார்.
அரசியல்னா சும்மாவா!