ஏனுங்க தம்பிதுரை சார்.. வானதி மேடத்தின் எம்.பி. கனவுக்கு இப்படியா வேட்டு வைப்பீங்க?
கூட்டணி தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் வெளிவருவதைக் கண்ட தமிழிசை சௌந்தராஜனும் பொன்னாரும், ` இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இந்த மோதலால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் வானதி சீனிவாசன்.
கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வானதி. சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆனால், 33, 313 வாக்குகள் அவருக்குக் கிடைத்தது. பா.ஜனதா வேட்பாளர்களில் அதிக வாக்கு பெற்றவர்களில் 5–வது இடத்தை பிடித்தார்.
டெபாசிட்டை பெற்ற 4 பேரில் இவரும் ஒருவர். தேர்தலில் தோற்றாலும் அதை பொருட்படுத்தாமல் மறுநாளே தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல புறப்பட்டார்.
அப்போது பேசிய வானதி, நான் யாருக்கும் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட தரவில்லை. நேர்மையாக இவ்வளவு பேர் வாக்களித்து இருக்கிறீர்கள். உங்கள் வாக்குகள் ஒரு போதும் வீணாகாது. உங்களுக்காக எப்போதும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். எந்த உதவிக்கும் நீங்கள் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். மாநில அரசில் அதிகாரத்தில் இல்லாமல் போனாலும் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்க செய்வேன்' என உருகினார்.
இதன்பின்னர், கோவையில் சேவை மையம் அமைத்து புகார்களை வாங்குவது, வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது என ஆக்டிவ்வாகச் செயல்பட்டு வந்தார்.
மீண்டும் தொகுதி வேலை பார்க்க ஒரே காரணம், அதிமுக-பாஜக அணி அமைந்தால் கோவை எம்பி தொகுதியில் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போட்டார்.
இந்தக் கணக்குக்கு சுழி போட்டவர் அந்த பகுதி அமைச்சர் என்கிறார்கள் பாஜக பொறுப்பாளர்கள். இதைப் பற்றிப் பேசும் அவர்கள், ' தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே எம்எல்ஏ சீட் கேட்டு வானதி போட்டியிட்டிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.
ஏனென்றால், அந்த அமைச்சருக்கும் அதுதான் சொந்தத் தொகுதி. அவருக்கு எதிராக வலுவான வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. வானதியும் அமைச்சரும் சமரசமாகிவிட்டதாக பேச்சு கிளம்பியது.
இந்த நிலையில், கூட்டணி பற்றி தம்பிதுரை பேசிய பேச்சுக்களால் வானதி கலக்கத்தில் இருக்கிறார். எப்படியாவது எம்பி ஆகிவிடலாம் என்றால், இப்படியெல்லாம் தடுக்கிறார்களே எனக் கோபப்பட்டிருக்கிறார். டெல்லி நல்ல முடிவை எடுக்கும் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்' என்கின்றனர்.
-அருள் திலீபன்