பாஜக மீது தம்பிதுரைக்கு என்ன காண்டு? சசிகலா பெயரைச் சொல்லி அன்றொருநாள் அருண் ஜெட்லி வைத்த கொள்ளி!

அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பைக் காட்டியிருக்கிறார் தம்பிதுரை. இதன் பின்னணியில் பழைய பகைகள் இருக்கிறதாம்.

துக்ளக் 49வது ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி அவசியம் எனப் பேசினார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், 'அது குருமூர்த்தியின் விருப்பம். பாஜகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் விருப்பப்படவேண்டும்' என்றார்.

அதேநேரம், கோவையில் பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை சீர்குலைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் எடுத்து வரும் முயற்சிகள் எடுபடாது. குட்கா, கொடநாடு என அதிமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர் காய்வதே திமுகவின் கொள்கை.

ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. நாங்கள் பாடுபடுகிறோம் நிலைத்திருக்கிறோம்.

பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். அவர்களை சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா?' என்றார்.

தம்பிதுரையிடம் இருந்து இப்படியொரு காட்டமான வார்த்தைகளை தமிழிசை எதிர்பார்க்கவில்லை.

பொன்.ராதாகிருஷ்ணனும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதன் பின்னணி பற்றிப் பேசும் அதிமுகவினர், ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா ஆதரவாளராக இருந்தார் தம்பிதுரை. யார் நெக்ஸ்ட் சி.எம் என்ற பேச்சு வந்தபோது, சீனியர் என்ற அடிப்படையில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தார்.

ஆனால் அந்தப் பதவி எடப்பாடி கைகளுக்குப் போய்விட்டது. இதன்பிறகு, டெல்லி விவகாரங்களை தனியாகக் கையாள ஆரம்பித்தார் எடப்பாடி.

தம்பிதுரையிடம் முக்கிய முடிவுகளை விவாதிப்பதும் கிடையாது. இதற்கு பாஜகதான் காரணம் என அறிந்து ஏகக் கடுப்பில் இருந்தார்.

அதே காலகட்டத்தில் அருண் ஜெட்லியை சந்திக்கச் சென்றிருக்கிறார் தம்பிதுரை. அப்போது அந்த இடத்தில் தமிழிசையும் இருந்திருக்கிறார்.

அவரை அந்த இடத்தில் தம்பிதுரை எதிர்பார்க்கவில்லை. அப்போது பேசிய ஜெட்லி, 'வாங்க மிஸ்டர்...சசிகலா ஆதரவாளராக என்னை சந்திக்க வந்திருக்கிறீர்களா' எனக் கேட்டார்.

இதை தம்பிதுரை எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லாமல், நான் அப்புறம் வருகிறேன் எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். சிறையில் இருக்கும் சசிகலாவோடு தம்பிதுரை நட்பில் இருக்கிறார் என டெல்லி சந்தேகப்படுவதையும் அவர் கவனித்து வந்தார். மொத்தக் கோபத்தையும் நேற்று இறக்கிவைத்துவிட்டார்' என்கிறார்கள் நமுட்டுச் சிரிப்புடன்.

- அருள் திலீபன்

More News >>