லோக்சபா தேர்தல் எப்போது? மார்ச் முதல் வாரம் வெளியாகும் எனத் தகவல்!
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 3-ந்தேதி முடிவடைகிறது. எனவே ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.விழாக்கள், பண்டிகைகள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆராய்ந்த பின் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரம் வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2004-ல் பொதுத் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 29-ந் தேதி வெளியானது. ஏப்ரல் 20 முதல் மே 10-ந் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 2009-ல் மார்ச் 2 - ந் தேதி அறிவிப்பு வெளியாகி ஏப்.16 முதல் மே 13 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
கடைசியாக கடந்த 2014-ல் மார்ச் 5-ந் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.