கர்நாடக காங்.எம்எல்ஏக்கள் கூட்டம் - 4 பேர் மட்டும் ஆப்சென்ட்!
கர்நாடக மாநில காங்.எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் மட்டும் பங்கேற்கவில்லை. எனினும் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி நிம்மதி அடைந்துள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் காங்-ம.ஜ.த.கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க தரப்பு திடீரென இறங்கியது. காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசியது. இதில் அமைச்சர் பதவி இழந்த ரமேஷ் ஜர்க்கோலி உள்ளிட்ட சிலர் வீழ்ந் தனர்.
மேலும் 10, 15 காங்.எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. திட்டம் போட்ட தகவல் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கட்சி எம்எல்ஏக்களை தக்க வைக்க களத்தில் காங்கிரசும் தீவிரமாக இறங்கியது. எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கும் தேதி குறித்து, கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடப்பட்டது.
காங்கிரஸ் தலைவர்களின் சமாதானப் பேச்சுவார்த்தையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் மனம் மாறினர். மற்றவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் 2 மணி நேர தாமதத்திற்குப் பின் 5.30 மணிக்கு கூடியது. இதில் மொத்தம் உள்ள 80 காங்.எம்எல்ஏக்களில் சபாநாயகர் தவிர்த்து 75 பேர் பங்கேற்றனர். ஆப்சென்ட் ஆன 4 பேரில் உமேஷ் யாதவ் உடல் நிலையை காரணம் காட்டி பங்கேற்க இயலவில்லை என்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவதாக பேக்ஸ் கடிதம் அனுப்பியிருந்தார்.
கூட்டத்தில் பங்கேற்காத ரமேஷ் ஜர்க் கோலி, உமேஷ் குமட்டாலி, பி.நாகேந்திரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 பேர் மட்டுமே அதிருப்தியில் உள்ளதால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்தில்லை என இரு கட்சித் தலைவர்களும் பெருமூச்சு விட்டுள்ளனர்.