பயன்படுத்தப்படாத கிரடிட் கார்டுக்கு 63 லட்சம் பில்: குட்டு வாங்கிய வங்கி
"சார், உங்களுக்கு கிரடிட் கார்டு சாங்ஷன் ஆகியிருக்கு... ஆதார் அல்லது பான் கார்டு ஜெராக்ஸ் மட்டும் அனுப்புங்க.." தினமும் இரண்டு அல்லது மூன்று அழைப்புகளாவது இப்படி வருகின்றன. கடன் அட்டை என்னும் கிரடிட் கார்டு தருவதற்கு இப்படி தாமாக முன்வரும் வங்கிகள், அட்டையை திரும்ப வாங்குவதே இல்லை.
"ஆணியே புடுங்க வேண்டாம்" ரேஞ்சுக்கு வாடிக்கையாளர் மனம் நொந்து கடன் அட்டையை திருப்பிக் கொடுக்க எவ்வளவு முயற்சித்தாலும் ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு மாதக்கணக்கில் வாடிக்கையாளர்களை அலைக்கழித்து விடுகிறார்கள்.
13 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பிக் கொடுத்த கடன் அட்டைக்கான பில்லாக 63 லட்சத்தை முன்னாள் வாடிக்கையாளரிடம் கேட்ட வங்கிக்கும் நிதி நிறுவனத்திற்கும் நுகர்வோர் தீர்ப்பாயம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை ராஜாஜி சாலையிலுள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் சண்முகசுந்தரம் என்ற வாடிக்கையாளர் இரண்டு கடன் அட்டைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு 17,200 ரூபாய் நிலுவைத் தொகையை கட்டி கணக்கை தீர்த்ததுடன் அந்த அட்டைகளையும் அவர் திருப்பி சமர்ப்பித்துள்ளார்.
2003ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கடன் அட்டைகளுக்கு நிலுவை தொகை மற்றும் தாமத கட்டணம், வட் சேர்த்து ரூ.63,14,844 செலுத்த வேண்டும் என்று கோரி மும்பையை சேர்ந்த சாஹா என்ற நிதி நிறுவனம் பில் அனுப்பியிருந்தது. மேலும் கடன்களை திரும்ப செலுத்தாதோர் பட்டியலில் (சிபில்) சண்முகசுந்தரத்தின் பெயரையும் சேர்த்திருந்தது.
தான் ஏற்கனவே உரிய தொகை செலுத்தி திரும்ப சமர்ப்பித்த கடன்அட்டைகளுக்கு பணம் கேட்பதாக சண்முகசுந்தரம், வடசென்னை நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மனு செய்திருந்தார். அதற்கு, ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி, தங்கள் கடன் அட்டைகளை 2010ம் ஆண்டு மும்பையின் சாஹா நிதி நிறுவனத்திடம் விற்றுவிட்டதாகவும், சண்முகசுந்தரத்தின் அட்டையின் அப்போதைய கணக்குப்படி திரும்ப கட்டப்படாத தொகைக்கு தாமத கட்டணமும் வட்டியும் விதிக்கப்படுவது இயல்புதான் தெரிவித்திருந்தது.
நுகர்வோர் தீர்ப்பாயம், வங்கி கடன் அட்டைகளை நிதி நிறுவனத்திற்கு மாற்றிய விவரங்கள் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்காததோடு, மாற்றப்பட்ட விவரங்களுக்கும், வாடிக்கையாளர் தம் அட்டைகளுக்கான கணக்கை தீர்த்தபிறகு அவர் அந்த அட்டைகளை பயன்படுத்தி செலவு செய்ததை நிரூபிக்கவும் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லையென்றும் கூறியதோடு, கடனை திரும்ப செலுத்தாதோர் பட்டியலிலிருந்து வாடிக்கையாளரின் பெயரை நீக்கி, அவர் மற்ற வங்கிகளில் கடன்பெற தடையில்லா சான்று கொடுக்கவேண்டும் என்றும், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 30,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.