காங்கிரசுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி திட்டவட்டம்!
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. பா.ஜ.க வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறாமல் இருக்க இரு கட்சிகளும் கூட்டணி சேருவது தான் நல்லது என்ற ரீதியில் பேச்சுவார்த்தைகளும் நடந்தது.
இதற்கு காங்.கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் அஜய் மக்கான் முட்டுக்கட்டையாக இருந்ததால் அவரை நீக்கிவிட்டு டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை நியமித்தது காங்கிரஸ். இதன் பின்னரும் சுமூக நிலை உருவாகவில்லை. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநிலப் பொறுப்பாளர் கோபால் ராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி என்ற கசப்பான மருந்தைக் கூட குடிக்கத் தயாராக இருந்தோம். ஆனால் ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெறும் சட்டப்பேரவை தீர்மானம் குறித்தே காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவது சிக்கலாகி விட்டது. இதனால் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது.
டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் . எம்.பி. தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனவும் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.