ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் - திவாகரன் அதிர்ச்சி தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மருத்துவர் பாலாஜி மட்டும், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுயநினைவு இல்லை என்றும் ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. அதன்படி மருத்துவ அறிக்கையை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையிலும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திவாகரன், ”நான்காம் தேதி இரவு மருத்துவமனைக்குச் சென்றேன். அன்று மாலை 5.15 மணிக்கே முதல்வர் மாரடைப்பில் இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

அதன் பிறகு இயந்திரங்களில்தான் அவர் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் ரெட்டியிடம் அது குறித்து கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசைச் சேர்ந்த ஒருவர் அப்போது மருத்துவமனையில் இருந்ததாகவும் அவருக்கு இது குறித்துத் தெரியும் என்றும் திவாகரன் கூறியிருக்கிறார்.

More News >>